வெள்ளி, 11 மே, 2018

இதயத்தை கொய்தவளே...

இதயத்தை கொய்தவளே...

டபடவென சிறகடித்தும்
ஓரிடத்தில் பறக்கும் இரு
பட்டாம்பூச்சிகளா உன் விழிகள்...?

துளியும் பார்வை சிந்தாமல்
கோர்வையாய் இதயத்தை
கொய்து போறவளே...!

உன் பார்வைபட்ட மறுநொடியில்
வெற்றிடம் தேடிய காற்றாய்
உன்னுள் வர முயல்கிறேனடி,

ஈர்க்கும்  காந்த விழியழகே
நீயிருக்கும் திசையெல்லாம்
கவிதைகள் எழுதி வைத்தேன்,

என் இமை மயிர்களுக்கு
தூரிகையெனும் உரு கொடுத்த
செந்தமிழ்த் தாரகையே,

உன் கண்களை ஓவியமாய்
இதயத்தில் வரைந்து விட்டேன்,
நான் மட்டும் ரசித்துக்கொள்ள...!

என்ன மாயம் செய்தனவோ
உன் விழிகள்...!
என் விழிகளின் ஈரத்தையெல்லாம்
வரிகளாகத் தொடுக்க வைக்கிறது,

அதை வாசிக்கும் உந்தன்
விழிகளின் அழகைக் காட்டிவிடு
அந்த ஞாபகத்தை எனக்குள்
பூட்டி வைப்பேன்,

பூட்டி வைக்கும் ஞாபகத்தை
கனவுகளாய் உரு கொடுத்துத்
நிஜமதில் வாழ வைப்பேன்,

பெண்ணே எந்தன் இதயத்தின் 
சிந்தையெல்லாம் உந்தன்
கண்களால் சிதற விட்டேனடி,

ஏனடி என்னை புலம்பவிட்டு
தள்ளிநின்று வேடிக்கைப்
பார்கிறாய்...?

பதில் கூறா கண்மணியே
உன் மௌனத்தால் என்னைக்
கூறு போட்டுக் கொல்லாதே,

பார்வையால் என்னைப்
பட்டென சாய்த்தப் பாவையே
என்னைப் பாடாய் படுத்தாதே,

தொலைதூரத் தாமரையே
என்னக்குத் தாரமாய் வந்து
என்னை உனக்குச் சொந்தமாக்கிடு,

உன் நெஞ்சில் ஆடவைக்க
தாலிக்கெடி ஏந்தி நமக்கான
நாள் நோக்கி காத்திருக்கிறேன்,

வா வா பெண்ணே மனம்
சேர்ந்து மணம்கொள்ள
என்னவளாய் எனக்காக...

By...Ajai Sunilkar Joseph 




5 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!