யாரும் என்னைப் பார்க்கவில்லை
சிறு துளி உதிரமாய் இருளிலே
மூழ்கி விட்டேன்,
பலகோடி அணுக்களிலே நான்
மட்டும் அந்த சிம்மாசனத்தை
அடைந்து விட்டேன்,
எனக்குள் அவ்வளவு சந்தோஷம்
என்னவென்றால் இவள்
என்னைக் காணமலே ரசிக்கிறாள்,
நான் அங்கிருந்து உதைத்தாலும்
உள்ளே மூச்சிழுத்து எனக்கு
சுவாசம் தருகிறாள்,
மூழ்கி விட்டேன் என்றேனல்லவா...?
கருவில் சிசுவாய் அவளின்
உள்ளே உரு பெறுகிறேன்,
என்னை மூச்சடக்கி அடைகாத்துக்
கொண்டிருக்கிறாள் இந்த
பூவுலக தேவதை,
எங்கேயும் முட்டாமல்,மோதாமல்
என்னைத் தாங்கிய படியே
நடந்து செல்கிறாள்,
இவளின் உன்னதமான அன்பை
இப்போது நான் மட்டுமே அறிவேன்,
ஆனால் இவள் அடிக்கடி
சோர்ந்து போகிறாள்,
காரணம் நானென்று அறிகிறேன்,
இருந்தாலும் நான் என்ன
செய்வேன் இப்போது...?
இன்னும் கொஞ்ச நாள்தான்
என்று சொல்ல நினைக்கிறேன்
ஆனால் முடியவில்லை,
நான் சீக்கிரமாய் வெளிச்சத்தில்
வந்து விடுவேன் என்று
தோன்றுகிறது இன்று,
இவள் யார் எனக்கு...?
சொல்லித்தர யாருமில்லை,
ஆனால் கண்டிப்பாக வெளியே
வந்ததும் கத்திவிடுவேன் அம்மாவென்று....
![]() |
By.... -Ajai Sunilkar Joseph |