வெள்ளி, 30 டிசம்பர், 2016

வார்த்தைக் கத்தி....

வார்த்தைக் கத்தி....

நான் பேசிய 
வார்த்தைகளே
என்னை கத்தி போல்
கிழிக்கிறது...
அதைக் கேட்டவள்
எப்படி தாங்கியிருப்பாள்
என்று நான் 
உணர்ந்தேன் இன்று...
அதனால்தான் என்னமோ 
இதயம் வலிக்கிறதோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வியாழன், 29 டிசம்பர், 2016

பொய்யான நிலா...

பொய்யான நிலா...



காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து 
அவள் மன வானில்...
By....Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 28 டிசம்பர், 2016

என் தவம்....

என் தவம்....

யாருக்கு நீ வரமாக 
கிடைக்கப் போகிறாயோ 
எனக்குத் தெரியவில்லை,
நீ எனக்கு கிடைத்தால்
என்னை விட அதிக தவம் 
செய்தவர் யாருமில்லை...
By....Ajai Sunilkar Joseph




கரையோரம் சிந்திய கவிதைகள்



வெள்ளி, 18 நவம்பர், 2016

பிரிவுக்குப் பின் புலம்பல்தானோ...

காற்றே சாட்சி....

வ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து 
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...


Ajai Sunilkar Joseph


அடங்கிப்போன துடிப்பு....

யிர் நீத்த பறவையாக
உன் உறவை இழந்த
என் இதயத்துடிப்பு
அடங்கிப் போனதடி(டா)...

Ajai Sunilkar Joseph


தொலைத்து விட்டாள்...


ன்னைப் பார்த்த 
முதல் நாளிலே...
என்னை உன்னிடம்
கொடுத்து விட்டேனே...
நான் உனக்கு
கொடுத்த என்னை
நீ தொலைத்தாயோ...!
உன்னிடம் பலமுறைத்
தேடிப் பார்த்தும் என்னைக் 
காணவில்லையே...!


Ajai Sunilkar Joseph



கிறுக்கனின் வலிகள்(வரிகள்)....


நீ எனக்கு கொடுத்த
வலிகளை தினம் தினம்
வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் காகிதத்தில்...
இந்த கிறுக்கனின் 
வரிகளும் , வலிகளும்
என்றாவது ஓர் நாள்
உனக்கு புரியும் என்று...


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 16 நவம்பர், 2016

கிடைத்தாள் புதிய தோழி....

கிடைத்தாள் புதிய தோழி....



லைப்பேசியின் 
அலைரிசையில்
அகம் பகிர்ந்த 
முகம் தெரியாத
ஓர் உண்மையான
உறவுதான் நீ...
உன்னை எனக்கு 
தோழியாய் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...!!!


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவன் 


ஞாயிறு, 13 நவம்பர், 2016

பெண் பூவே....

பெண் பூவே....



ண்டின் இரைச்சல் கேட்டு
புன்னகைக்க மறுத்தாயோ
என் ( பெண் ) பூவே...!
நீ புன்னகைக்க மறுத்ததால்
என் இதயப் பூந்தோட்டம்
வாடி மாண்டதை அறிவாயா...?
பெண் பூவே...!
உன் புன்னகை பார்க்க பூங்காற்றாய் 
உன்னை வருட வந்தேனடி...
புரிந்து கொண்ட நீயோ என்னை
முட்களாலே நெருடிச் சென்றாயடி...


Ajai Sunilkar Joseph






பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்...





சனி, 12 நவம்பர், 2016

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...


ண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...



Ajai Sunilkar Joseph



பிரியமில்லாதவன்

வெள்ளி, 11 நவம்பர், 2016

அவள் வரவை எதிர்நோக்கி...

அவள் வரவை எதிர்நோக்கி...





வீசும் காற்றாய் வந்து
என் மூச்சாய் கலந்து
என்னிதயம் சேர்ந்தவளே...!
எங்கேதான் இருந்தாயோ...!
எனக்கெனதான் பிறந்தாயோ...!
நீ விட்டுச் சென்ற உந்தன்
சுவாசம் என்னுள் வந்து 
உன்னை எனக்கானவள் என்று 
உணர்த்துவது மெய்யா...? பொய்யா...?
புரியாத நானும் உன் வரவை 
எதிர்நோக்கி காத்திருக்கிறேன் 
அறிவாயா...?

பிரியமில்லாதவன் 
Ajai Sunilkar Joseph






 பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்



வெள்ளி, 14 அக்டோபர், 2016

சோறு போட்ட மண்

சோறு போட்ட மண்




ஞ்சை,புஞ்சை
              என்று விளைந்த
எங்கள் மண்ணின்
              நெஞ்சை பிளந்து
நஞ்சு விதைக்கும் 
              திட்டங்கள் வேண்டாம்.
எம் அரசே...
              சோறு போட்ட மண்ணை
கூறு போடுவதுதான் ஏனோ...!
              மூன்று வேளை சோறு
தின்றும் போட்டாயோ கூறு...!!!



Ajai Sunilkar Joseph







ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வெண்மதி Tailors O/o Ajai Sunilkar Joseph

வெண்மதி Tailors 
O/o Ajai Sunilkar Joseph






அன்பான வலையுலக சொந்தங்களை இந்த 
பதிவில் சந்திப்பதில் பிரியமில்லாதவனுக்கு
சந்தோஷம்தான்....!
ஆனால்.....
                  என்னவோ வலையுலகை விட்டு
ரொம்ப தூரமாக போனதாக உணர்கிறேன்,
அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்....

ஏற்கனவே ஒரு பதிவில்
என்னை பற்றி கொஞ்சம்
சொல்லி இருக்கிறேன்.

அதில் சொன்னபடி எல்லாம் வல்ல 
இறைவன் அருளால் தையல் வேலையை
ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்.

6-7-2016 ம் தேதி என் வாழ்க்கையில்
நான் உழைத்து பிழைக்கவே இந்த
வெண்மதி எனக்காக உதித்தாள்.
நான் இந்த வெண்மதிக்கு முதலாளி 
ஆகி விட்ட காரணம்தான் வலையுலகை
விட்டு ரொம்ப தூரம் போன காரணம் கூட.

அம்மா,அப்பா ஆசியுடன் தையல் கடையை
ஆரம்பித்தேன் இறைவன் அருளால் 
அருமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடைக்கு தமிழ் பெயர்தான் வேண்டும் 
என்பதாலும்,என்னவள் பெயரரும்
சேர வேண்டும் என்பதாலும் தான்
இந்த வெண்மதியை உதிக்க வைத்தேன்.

இந்தப்பதிவுக்கு இப்போதாவது நேரம்
கிடைத்தது என்பதுதான் சந்தோஷம்.



மன்னிக்கவும் சொந்தமாக நான் தொழில்
துவங்கிய காரணத்தால் உங்கள் தளங்களுக்கு
என்னால் வரமுடியவில்லை என்பதை
வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்...

நான் உழைத்துப்பிழைக்க இந்த வெண்மதி உதித்தது 
மட்டும்தான் சந்தோஷம்.


இதோ என் வாழ்க்கையில் எனக்காக உதித்த வெண்மதி





(அன்பு நண்பர் Killergee என்னை காணவில்லை என்று ரொம்ப தேடினார்
அவருக்காகவே இந்தப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)


இதோ பிரியமில்லாதவன்







வியாழன், 9 ஜூன், 2016

துடித்து மலருதடி...

துடித்து மலருதடி...



ன் நாவின் சத்தம் 
கேட்க என் ஆவி
எனக்குள் துடிக்குதடி...
உன் கூந்தல் மயிரில்
அரை நாள் வாழ
என் உயிரும் தினம்
பூ போல மலருதடி...!










-பிரியமில்லாதவன் 


வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை








ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...







விதைகள் வீசும் 
                         கன்னிப் பூவே...
உந்தன் கண்கள் 
                         பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
                         விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
                         ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
                         உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
                         எந்தன் மூச்சில்...






பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 22 மே, 2016

முத்தழகு மழலை

முத்தழகு மழலை


 துளி உதிரம்
                  சிறு துளியாகி...
கருப்பை சென்று...
                  கர்ப்பம் கொண்டு...
மாதங்கள் சில 
                  மூச்சடக்கி பெத்தெடுத்த
முத்தழகு நீயோ...!










பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 20 மே, 2016

ஒளி இழந்த விழிகள்

ஒளி இழந்த விழிகள்...




ளி இழந்த விழிகளுக்கு
பிழைக்க ஒரு வழி இல்லையே
வழியோரம் பாடுகிறோம்
வயிற்றுப் பிணி போக்கிடவே...



பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 18 மே, 2016

மீண்டும் மூழ்கடிப்பாளா...!

மீண்டும் மூழ்டிப்பாளா...!









வளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத்  துளிகள்

ஞாயிறு, 15 மே, 2016

உள்ளம் கொள்ளை கொண்டவள்...

உள்ளம் கொள்ளை கொண்டவள்...






அவளது வெட்கம் தந்து 
                            எந்தன் உள்ளம் 
கொள்ளை கொண்டாள்...
                            வெள்ளை உள்ளம் 
தந்து கவிதை ஒன்றை 
                            படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை 
                            தேவதையே உன்னை 
இழுத்தணைத்து உதட்டோரம் 
                            ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
                            வெட்கத்தால் கண்களை 
மூடி எந்தன் மார்பில் 
                            முகத்தை புதைத்துக் 
கொண்டவள் அங்கே
                            என் இதயம் சொன்ன 
கவிதைகளை கேட்டிருப்பாளா...!











Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 10 மே, 2016

தவத்தின் பலன் பொய்யூரா...?

தவத்தின் பலன் பொய்யூரா...?



பத்து மாதம் தவமிருந்தாள்

வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...

அவளின் உள்ளே தவமிருந்தேன்

எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...

தவத்தின் பலனாய் என்னை கண்டு

கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...

மழலை மொழியாய் மொழிந்தேன்

நானும் அவளின் முகத்தை கண்டு...

பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...

அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...

என்னை அவளின் மகன் என்று...









Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 7 மே, 2016

பேனாவின் முத்தங்கள்

பேனாவின் முத்தங்கள்


வெள்ளை காகிதங்களே
              எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
              எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
              துளிகள் ஆனதோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்







(பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும்
பணிகள் தீவிரமாய் நடப்பதால்
வலையுலக சொந்தங்களே உங்கள் 
பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து
 கருத்துரை இட என்னால் முடியவில்லை 
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

புதன், 4 மே, 2016

முகநூலில் அவளின் அகநூல்

முகநூலில் அவளின் அகநூல்





முகநூலில் அகங்கள் பரிமாறியே

என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...

இணையத்திலோ இதயங்கள் பேச...

ஒரு முறையாவது நேரில் 

சந்திக்கலாமா என்று சிந்திக்க...

புகைப்படங்களின் பரிமாற்றத்தால்

சிந்தித்த சந்திப்பு கைநழுவ...

இதயங்களுக்கு இதமான நிழல் 

தரும் விருட்சமாய் காதல் வளர...

அந்த நிழலில் தானே அவளை

தேடி தவம் கிடக்கின்றேன்...

அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...

என்னுள் எனக்காய் தவம் கிடக்கும் 

தேவதை அவள்தான் வருவாளா...!

வந்து வரம்தான் அருள்வாளா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்






       




செவ்வாய், 3 மே, 2016

துளியளவு நேசம்

துளியளவு நேசம்...


துளியளவு நேசம் தந்தாள்...
கடலளவு சுவாசம் கொண்டேன்...
இதயக் கடலின் நினைவலையால்
நொடிக்கு ஒருமுறை மோதுகிறாள்...
கரையாய் இருக்கும் என்னை 
கரைத்து அவளில் சேர்த்திடத்தானோ...!
கரைகிறேன் நான் மெல்ல மெல்ல...
அவளுடன் சேர்ந்து வாழ்ந்திடவே...!



Ajai Sunilkar Joseph 
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 30 ஏப்ரல், 2016

என்னில் சந்தோஷத் தோரணம்

என்னில் சந்தோஷத் தோரணம் 





எனக்குத் தாரமாகும்
                     வரம் பெற்றத் தாரகை
என்னை விட்டு 
                    தூரம் சென்றதால்...
தனிமை பாரம்
                    என்னை சாய்த்ததே...!
பாரம் தந்தவளிடம்
                    எனக்குத் தாரமாக 
வந்திடத்தானே தவம்
                    கிடந்து வரம் பெற்றேன்...
என்னில் சந்தோஷத்
                    தோரணம் தான் ஏனோ...!
என் தவத்திற்கு வரம்
                    கிடைத்த காரணம் தானே...!








Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்




வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நானும் என் தளமும்...

வலையுலக சொந்தங்களுக்கு
பிரியமில்லாதவனின் 
பிரியமான வணக்கங்கள்...


என்னைப்பற்றி இதுவரை யாரிடமும் 
நான் சொன்னது கிடையாது.
ஆனால் இங்கு என்னைத் தொடரும் சொந்தங்களுக்கு
சொல்ல ஆசைப்படுகிறேன்.


எனது பெயர் அஜய் சுனில்கர்
எனது அப்பாவின் பெயர்தான் ஜோசப்
அதை சேர்த்துதான் அஜய் சுனில்கர் ஜோசப் என்று
சேர்த்து வைத்துக்கொண்டேன்.



கன்னியாகுமரி மாவட்டத்தில் 
தேங்காய்பட்டணம் என்ற ஊரின் பக்கத்தில்
தொழிக்கோடு என்ற ஊரில்...


சாதாரண பிறப்புதான்,
கண்டிப்பான குடும்பம் , அழகான வாழ்க்கை 
அன்பான அப்பா , அம்மா, அண்ணன், அக்கா, கடைசியாக நான்

எவ்வளவுதான் கண்டிப்புடன் என்னை வளர்த்திருந்தாலும்...
எனது பள்ளிக்கூட வாழ்க்கை 7- ஆம் வகுப்புவரைதான் பயணித்தது.


காரணம் 
படிப்பு என்றாலே மண்டையில் ஏறாது...

பள்ளிக்கூட தேர்வுகளில் 35 தான் வெற்றி மதிப்பெண் என்றால்
அந்த மதிப்பெண்கள் கூட கிடைக்காது.

ஒரு தேர்வில் எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து
98 மதிப்பெண்கள் வாங்கினேன் என்றால்
நான் எப்படி படித்திருப்பேன்
என்று நினைத்துப் பாருங்கள்.

படிப்பில் நாட்டம் இல்லாததால் பள்ளிக்கூடம் 
போகாமல் கட் அடித்தேன்.
பள்ளிக்கூடத்தில் இருந்து ஆள் அனுப்பி
வீட்டில் அறிவித்தார்கள்.

அப்பா அடிப்பார் என்று ஓடினேன்
வீட்டை விட்டு எங்கேயாவது போக வேண்டும் என்று...
ஆனால்...

வீட்டில் எவ்வளவுதான் கண்டிப்பு இருந்தாலும் 
அந்த அன்பான வாழ்க்கையை
விட்டுப் போக மனம் அனுமதிக்கவில்லை...

அன்று மதியமே வீட்டில் போனேன்.
வந்ததும் அப்பா அடிக்கவில்லை...
பள்ளிக்கூடம் போறியா...?
வேலைக்கு போறியா...?
என்றார்.

படிப்பில் வேறு நமக்கு வெறுப்பு.
அதனால் வேலைக்கு போறேன் என்றேன்.

அப்போது 2006 ஆம் ஆண்டு
ஒரு தையல் கடையில் என்னை தையல் கற்க
ஏற்பாடு செய்திருந்தார் அப்பா...

அந்த நேரம்தான் 
சிறுவர் தொழிலாளர்களை
தேடி கண்டு பிடித்து
படிக்க வைத்து வந்தார்கள்.

ஆனால் நான் இருந்த பகுதியில் 
அப்படியாரும் என்னை தேடி வரவில்லை.
2006 முதல் 2009 வரை அங்கு
இருந்தேன்.

வெறும் சட்டை மட்டும் தைக்க
கற்றுக் கொடுத்தார்கள்.
பிறகு அங்கு பிடிக்காததால்
அங்கிருந்த எனது தையல் மெஷினை எடுத்து
விட்டு கிளம்பினேன்...

வரும்போது முதலாளி நல்ல ஆசீர்வாதம்
வழங்கி அனுப்பினார்.

என்ன ஆசீர்வாதம் என்று தெரியுமா...?
அவரிடம் வேலை படிக்காமல் வேறு எங்கே போனாலும்
நான் உருப்படவே மாட்டேன் என்பதே....

நெஞ்சில் கொள்ளிக்கட்டையால்
சுட்டதுபோல் வடு இன்னும் மாறவில்லை...

பிறகு பக்கத்து ஊரில் அப்பாவின் நண்பர்
ஏற்பாடு செய்த கடைக்கு 
போனேன்.

அங்கு பேண்ட, சட்டை தைக்க கற்றுத்தந்தார்கள்
ஆனால் அங்கு எப்போதும் முதலாளி
கடையில் இருப்பதில்லை
அதனால் அங்கும் நிலைக்கவில்லை.

பிறகு சொந்த ஊரில் ஒரு கடையில்
2 வருடங்கள் தைத்து
பிறகு பேண்ட், சட்டை வெட்டித் தைக்க
கற்றும் தந்தார்
தைரியமும் தந்தார்...

அந்த கடையில் கொஞ்ச நாட்கள்
வேலை செய்து விட்டு...
முதலாளியின் அனுமதியுடன் திருநெல்வேலியில்
பத்தமடை என்ற ஊரில் எனது பெரியப்பாவின் கடையில்
பெண்கள் ஆடைகள் தைத்து படிக்க போனேன்.
அங்குள்ள இயற்கை எனக்கு ஒத்து வராததால் அங்கு
ஒரு மாதமும் நிலைக்கவில்லை...

பிறகு சொந்த ஊரிலேயே வேறு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.
அங்கு 2 வாரங்கள் வேலை செய்தேன்...
மூன்றாவது வாரம் வேலை செய்து விட்டு
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2012- ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 18- ம் தேதி...
ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாமல் ஊர் சுற்றுவது
நண்பர்களின் வழக்கமான ஒன்று
அன்றும் வழக்கமாக ஊர் சுற்றி விட்டு வரும்போது...

என் பின்னால் இரண்டு நண்பர்களை
அமர வைத்து என் அண்ணனின்
பைக்கில் வந்து கொண்டிருந்தேன்...


ஒரு வளைவான ரோட்டில் அரசுப்பேருந்து விரைவாக
வந்து கொண்டிருந்தது.
ஒலிப்பெருக்கி அப்பேருந்தில் இல்லை போல...

கண் இமைக்கும் நேரத்தில் என் வாழ்க்கை
திசைமாறி பயணித்தது...

ஆமாம் எனது உயிர் ஒரு நொkடி
பிரிந்து சேர்ந்தது...
விபத்து ஒன்றில்...

பேருந்து மோதிய வேகத்தில் 
என் பின்னால் இருந்த நண்பர்கள் தூக்கி
வீசப்பட்டனர்...

நான் எனது கால் முறிக்கப்பட்டு
நான் சென்ற வாகனத்தில் 
அதிசயமாக விழாமல் அமர்ந்தே இருந்தேன்...

நல்ல வேளையாக எனது நண்பர்கள் 
காயங்கள் ஏதுமின்றி 
தப்பித்துக் கொண்டனர்...

எனது வலியும் விபத்து பயமும் என் மூளையில்
நேரடியாய் தாக்க....
அம்மா என்று கத்தியதே பக்கத்து ஊரில்
உள்ளவர்களை சம்பவ இடத்தில் வர வைத்தது.

நான் மெதுவாய் சாயத்துவங்க
பக்கத்தில் நின்ற ஒரு மனிதர் என்னை
விழாமல் தாங்கி பிடித்தார்...

வலது கால் முறிந்து இடது பக்கமாக
வண்டியுடன் சாய
அந்த மனிதர் என்னை பிடித்ததனால்
என் இடது கால் முறிவில் இருந்து தப்பியது.

என் அம்மாவுக்கு இந்த சேதி அறிவிக்கப்பட்டு
என் அம்மா, அக்கா, பாட்டி 
ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே
வந்து அழுதனர்...
நான் ரோட்டில் பிணம் போல் கிடந்ததைப் பார்த்து...

4 மணிக்கு விபத்து நடந்தது
ஆம்புலன்ஸ் போன் போட்டு 1½மணிநேரம்
கழித்தே வந்தது...

அருகே உள்ள மருத்துவ மனையில் என்னை அனுமதித்தனர்.
அறுவைசிகிட்சையில் காலில் ப்ளேட் வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் மருத்துவமனையில் இருந்து
கொஞ்சம் கஷ்டப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி
Walker உதவியுடன் நடந்து,
பிறகு Stick  உதவியுடன் நடந்தேன்.

பிறகு ஒரு வருடம் ஆகும் முன்னால்முன்னால்
கால் இடறி விழுந்து மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை
செய்தனர்.
மீண்டும் ஒரு வருடத்துக்கு பின்னர்
நடக்கும்போது கால் வளைவு ஏற்பட்டதால்
மூன்றாவதாக அறுவைசிகிட்சை
செய்யப்பட்டது.

இப்போது மூன்றாவது அறுவைசிகிட்சை முடிந்து
2 வருடங்கள் கழிந்த நிலையில் மெல்ல மெல்ல நடக்கிறேன்...

விபத்தின் மூலம் கால் 1¼ அங்குலம்
உயரம் குறைந்ததால்....
உயரத்தை அதிகப்படுத்த மீண்டும் ஒரு
அறுவைசிகிட்சை செய்ய நேரலாம்...


விபத்துக்கு பின் கிடைத்த ஓய்வு
நாட்களில் 
எனது முதல் முதலாளியின் ஆசீர்வாதத்தை
முறியடிக்க அந்த இறைவன் அருள்
புரிந்தார்...
அவருக்குத் தெரியாத வேலைகளை கூட
கற்றுக்கொண்டேன்.


இனி எப்படி இந்த கவிதைகள் என்ற பெயரில் கிறுக்கல்கள் எழுதினேன்,
எப்படி இந்த தளம் உருவானது என்பதை 
இதோ இந்த இணைப்பில் சொல்கிறேன்...


👇👇👇👇👇
இத்தளத்தை பற்றி



என்னுடன் பேசிப் பழக நினைத்தால்

கைப்பேசி எண் : +919442128959

தொடருங்கள்....

****************************************************